
இந்திய ரயில்வேத் துறையில் 1 லட்சத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரயில்வேத் துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் குறித்தும், அதனை நிரப்புவதற்க்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களையில் பிரேந்திர பிரசாத் பாய்சியா (அசாம் மக்கள் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்) கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இந்த கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் ,”இந்திய ரயில்வே மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். ஓய்வு பெறுதல், ராஜினாமா செய்தல், இறப்பு, பதவி உயர்வு ஆகியவற்றால் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய, காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள், விதிகளை பின்பற்றி அந்தந்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 10,189 பேர் நிரந்தர வேலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேத் துறையில் 1 லட்சத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
அனுமதிக்கப்பட்ட பணியிடங்களைத் தவிர, கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட் டு வருகிறது. ரயில்வே துறையில் உள்ள அத்தியாவசிய மற்ற பணிகள் கண்டறியப்பட்டு, அவுட்சோர்சிங் (இதர சேவை அளிக்கும் நிறுவனங்கள்) மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
01.03.2020 நிலவரப்படி, இந்திய ரயில்வேத் துறையில், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 15,07,694 ஆகவும், பணியில் இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை 12,70,399 ஆகவும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,37,295 ஆகவும் இருந்தன
அதேபோன்று, கடந்த 2021 ஆண்டு நிலவரப்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 24,30,989 லட்சம் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்தனர். 2019ல் இந்த எண்ணிக்கை 13,64,377 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, இந்திய ரயில்வேத் துறையில் ஒப்பந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறித்தும், தனியார்மயமாக்கல் குறித்தும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ரித்தேஷ் பாண்டே கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ,” ரயில்வே துறையில் சமீப காலங்களில் ஒப்பந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும், ரயில்வே துறையை தனியார்மையம் செய்யக்கூடிய திட்டங்கள் அரசிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.